tamilnadu

img

மேலவளவு கொலை வழக்கு: இடைக்கால உத்தரவுகள் ரத்து

மதுரை:
மதுரை மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இடைக்கால உத்தரவுகளை  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விலக்கியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர்  மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்கச் சக்தியினர் , முருகேசன் உட்பட 6 பேரை படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன் கூட்டியேவிடுதலை செய்யப்பட்டனர்.

அதனை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை  செய்யப்பட்ட 13 பேரும், மேலவளவிற்குள் நுழையக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் கொண்ட சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் செவ்வாயன்று  வழக்கை தொடர்ந்த ரத்தினம் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “இந்த சிறப்பு அமர்வு, இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்டது. ஆனால் வழக்கின் மனுதாரர்  ஆஜராகவில்லை.  ஆகவே, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவுகளாக பிறப்பிக்கப்பட்டவை விலக்கிக் கொள்ளப்படுகின்றன” என உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம்  தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

;